Thursday, 5 November 2015

Video: திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் மது பாட்டிலை கொடுத்து

திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் மது பாட்டிலை கொடுத்து, தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுக்க பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்.
இன்று (புதன்) காட்பாடி கடைத்தெரு பகுதியை பார்வையிட்டஸ்டாலின், அங்கிருந்து மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில மாணவ மாணவிகள் எழுந்து குறைகளையும், அவருக்கு சில ஆலோசனைகளையும் கூறினர்.
அதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசினார். கலந்துரையாடலின் நடுவே நிவேதிதா எனும் மாணவி எழுந்து, ஸ்டாலினிடம் ஒரு குவாட்டர் பாட்டிலை நீட்டி, "ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊருக்கான சிறப்பு பொருட்களை உங்களுக்கு பரிசாக கொடுத்திருப்பாங்க. எங்க ஊர்ல சாராயம்தான் பிரபலம். இதனால்தான் எங்கப்பா செத்துப்போனார். சிறியவர், பெரியவர், பெண்கள் என்று யார் கேட்டாலும் சாராயம் கிடைக்கிறது. நீங்க ஆட்சிக்கு வந்தால் உடனே மதுவிலக்கை கொண்டுவாங்க" என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்தார்.
இதை பார்த்துத் திகைத்த ஸ்டாலின், அந்தப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி, "இதை முன்னரே நாங்கள் அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்குக் கொண்டு வருவோம்!" என்றார்.
கல்லூரி மாணவி மது பாட்டிலுடன் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment